ஓட்டை விற்காதே! நாட்டை கெடுக்காதே!
30-04-2016
தேர்தல் ஊழலுக்கு எதிராக சென்னை இளைஞர்கள் சிலர் மேற்கொண்ட ஊர்திப் பயணம்! இன்று காலை என்னோடு கலந்துரையாட வந்திருந்தனர்! தமிழர்களத்தின் தோற்றம், தேவை குறித்து விரிவாக விவாதித்தோம்! ஏற்கெனவே 5 நாட்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, திருச்சி என்று முடித்துவிட்டு தென் மாவட்டங்களை நோக்கிப் பயணப்பட்டனர்! வாழ்த்தினேன்! திராவிடம் இந்த மண்ணில் திணித்த காசுக்கு வாக்கு, இலவசத்திற்கு வாக்கு போன்றன தீவிரவாதிகளின் வன்முறையைவிட மோசமானவை!


- தமிழ்த்திரு. அரிமாவளவன்
இளந்தளிர்
27-04-2016
நேற்று திருச்சியில் இளந்தளிர் என்ற மாணவர் அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களோடு கலந்துரையாடினேன்! நம் இனத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கிற தலைமை வழிபாடுகள், சமூகப் பொருளாதாரச் சுரண்டல்கள் குறித்து விவாதித்தோம்! புதிய பார்வைகள், புதிய பாதைகள் குறித்தக் கனவுகளைக் கட்டியெழுப்பினோம்! “தூங்கியபின் வருவதல்ல கனவு! தூங்கவிடாது வருவதே கனவு” என்ற சொற்களில்தான் எத்துணை பொருள் பொதிந்து கிடக்கிறது! ஓரமாய் உட்கார்ந்து கொண்டு “இந்த நாடு உருப்படாது” என்று புலம்பிக் கொண்டிருக்கிறவனை உதைத்து எழுப்பு! உழை! ஒத்துழை! வியர்வை சிந்து! ஓயாது சிந்தி! மீண்டும் இந்த நாடு நம் கைகளுக்கு வரும்!


- தமிழ்த்திரு. அரிமாவளவன்
பெங்களூரில் தமிழ் நூலகம் சூறையாடப்பட்டுள்ளது!
23-04-2016
பெங்களூர் அலசூர் பகுதியில் தாமோதரன் தெருவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்ட அரிய நூல்களைக் கொண்ட திருக்குறள் நூலகம் சூறையாடப்பட்டிருக்கிறது. நான் பெங்களூரில் வசித்த காலத்தில் அடிக்கடி பயன்படுத்திய ஒரு நூலகம் இது. நேற்று இந்த நூலகத்தை அடித்து நொறுக்கி புத்தகங்களை அள்ளி வெளியே போட்டிருக்கிறார்கள். பெங்களூர் என்றவுடன் கன்னடர்கள்தான் இதைச் செய்திருப்பார்கள் என்று உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. நூலகத்தின் கீழ் பகுதியில் ஒரு பசனை மடம் வைத்து நடத்திக் கொண்டிருந்த ஒரு மலையாளிதான் இந்த ஈனச் செயலை செய்திருக்கிறார் என்று அறிய வருகிறேன். இன்று நூலகப் பொறுப்பாளர் திரு. நல்ல பெருமாளிடம் பேசினேன். அவருக்கு தமிழர்களத்தின் ஆதரவைத் தெரிவித்தேன். நூலகங்களைத் தாக்குவது இனவெறியாட்டத்தின் உச்சம். கருணாநிதியின் ஆட்சியில் எழும்பூர் ஆவணக்காப்பகம் எரிக்கப்பட்டது. இலங்கையில் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. இப்போது பெங்களூரில் தமிழ் நூலகம் தாக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது.
- தமிழ்த்திரு.அரிமாவளவன்
தலைமை பண்புகள்!
22-04-2016
நாம் வாழ்ந்த காலத்தில் நாம் பார்த்த தலைமை என்பது கருணாநிதி, செயலலிதா, எம்.ஜி.ஆர். போன்றோரே. திராவிடத் தலைமை. மற்றவர்களை மண்டியிட வைத்து ரசித்து ருசிக்கும் வந்தேறித் தலைமை. அண்டை மாநிலங்களில் பாருங்கள். உம்மன் சாண்டி, சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் மக்களோடு மக்களாக இருக்கும் காட்சிகள் இந்நாட்களில் அடிக்கடி வருகின்றன. இங்கோ, தலைவர்களை தெய்வங்கள் போல சித்தரித்து உயர்த்தி வைத்திருக்கிறார்கள். மக்களுக்கும் இத் தலைவர்களுக்கும் உள்ள ஒரே உறவு வழிபாடு மட்டுமே என்பது போல் ஆகிவிட்டது. வழிபாட்டுத் தலைமை ஒழிய வேண்டும். ஒரு விளக்குமாறும் ஐந்து கேமிராவும் இருந்தால் அடுத்த தலைவர் தயார், என்கிற நிலையும் இருக்கிறது. எனவே, நாடகத் தலைமை ஒழிய வேண்டும். ஊடக போதையில் வளரும் தலைமையும் இருக்கிறது. ஊடகங்கள் மயிர்பேனை வானுயர்ந்த பிம்பங்களாக உருவாக்குவதில் வல்லவை. உண்மை ஒரு நாள் இவற்றிற்கு உலை வைத்துவிடும். எப்போதும் உண்மையின் பக்கம் இரு. சண்டிச் சருகுகளைச் சாம்பலாக்க அந்த நெருப்பு மட்டுமே போதும். சனநாயக நாட்டில் தேர்தல் வழி அதிகாரம் அசுர பலத்தைக் கொடுக்கிறது. அந்த அசுர பலம் உனக்கு வேண்டும் என்றால் அன்றாட வாழ்க்கையில் தொண்டு செய்திருக்கிறாயா? என்பதுதான் முதற்கேள்வி. வாக்குறுதிகளில் இருந்து தேர்தல் தொடங்கக்கூடாது. அப்படியானால் இதுவரை என்ன செய்தாய்? ஒரு மரம்கூட நடாதவன் தமிழகத்தைப் பசுஞ்சோலையாக்குவேன் என்று சொன்னால் எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஐந்து முறை ஆட்சியில் இருந்த கருணாநிதியும் மூன்று முறை ஆட்சியில் இருந்த செயலலிதாவும் மதுவிலக்கு கொண்டுவரவில்லை. ஆனால் இன்று அவைகள் அவர்களது தேர்தல் வாக்குறுதிகளாக வருகின்றன. என்னே பித்தலாட்டம் இது? வாழ்வில் ஒரு சீமைக் கருவேல மரத்தைக்கூட அகற்றாதவன், “தமிழகத்தில் சீமைக்கருவேல மரத்தை அகற்றுவேன்” என்று பிதற்றுவது போல அல்லது எப்படி ஆங்கிலப் பள்ளி நடத்துகிறவனும், தன் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கிறவனும் தமிழ்வழிக் கல்வி பற்றி வாய்கிழியப் பேசுவது அனர்த்தமோ அல்லது கசாப்புக் கடைக்காரன் சீவகாருண்யம் பேசுவது அபத்தமோ அதுபோன்றே செயல்பாடு இல்லாத தேர்தல் வாக்குறுதிகள் கானல் நீரே. செயல்பாடு இல்லாத வீரவசனம் செத்த சவத்திலிருந்து வரும் வாசனைக்குச் சமம்.
- தமிழ்த்திரு.அரிமாவளவன்
வீழ்ச்சிக்கு வித்திடும் வீண் பெருமை!
13-04-2016
கார்னேஜ் என்கிற ஆங்கிலேயர் ஒரு வரலாற்று ஆசிரியர். அவர் திரித்து, திணித்த வரலாறுதான் இந்தியாவில் இந்து இசுலாமியர் மோதலுக்குப் பல வகைகளில் வித்திட்டது. குறிப்பாக அயோத்தி கோயில் விவகாரத்தில் அவர் திணித்த “அயோக்கிய அரசியல்”தான் பலருக்கு பல்குத்த உதவிய “வரலாற்றுக் குறிப்புகள்”. ஆங்கிலேயன் இந்த மண்ணிலிருந்து அகன்றாலும் அவன் திட்டமிட்டு விதைத்த நஞ்சு இன்று நம்மை வேட்டையாடிக் கொண்டு இருக்கிறது. அது போன்றே, திராவிடன் நம்மை விட்டு அகன்றாலும் தமிழகத்தை வேட்டையாட அவன் விதைத்திருக்கும் நச்சுக் கருத்தியல்களும் வரலாறும் ஒன்றிடண்டல்ல. ஆகவேதான் சொல்லுகிறேன், திராவிடம் வீழ்ந்து போகும். அதன் நச்சு ஆரவாரங்கள் தொடர வேண்டுமா? சிந்தியுங்கள்!
நிகழ்வு 1:
மீண்டெழும் பாண்டியர் வரலாறு என்கிற நூலுக்குப் பலர் முன்னுரை எழுதியிருப்பர். அரு கோபாலன், ஐயா குணா, பாவலர் காசி ஆனந்தன் ஆகியோரும் அதில் அடங்குவர். என்னிடமும் ஒரு முன்னுரை கேட்கப்பட்டது. நானும் எழுதினேன். "இந்நாட்களில் குறைந்தது மூன்று தமிழ்ச்சாதி நண்பர்களையாவது சந்திக்கிறேன். மூவரும் நாங்களே மூத்த சாதி என்று மெய்ப்பிக்கின்றனர். பெருமையாக இருக்கிறது. அதே வேளையில் இதை வைத்து மல்லுக்கட்டிக் கொண்டு இருப்பது மடத்தனம். இனம் வீழ்ச்சியுற்றுக் கிடக்கிற வேளையில், எழுச்சிக்குப் பணியாற்ற வேண்டிய நாம், இப்படி வரலாற்றுக் குறிப்புகளை வைத்து மோதுவது ஏற்கவியலாது" என்கிற பாணியில் எழுதினேன். எனது முன்னுரை வெளிவரவில்லை.
நிகழ்வு 2:
இராமநாதபுரத்தில் மறத்தமிழர் சேனையின் மாநாடு ஒன்று. நான் சிறப்பு அழைப்பாளர். ஊர்வலத்தில் பலத்த எழுச்சி. “மண்ணில் பாதி! மறவர் சாதி!” என்ற முழக்கம்தான் என்னை ரொம்பத் தொட்டது. இறுதியில் நான் பேச எழுந்தேன். தமிழர் வரலாற்றில் நடந்த பல படுகொலைகளை ஒவ்வொன்றாகச் சொல்லி, உரிமையோடும் ஆத்திரத்தோடும் கேட்டேன். “எங்கே போனோம், மண்ணில் பாதியான மறவர் சாதி?” என்று!
கேள்வி 1:
மண்ணாண்டது நாங்கள்தான் என்று மார்தட்டுவது நன்றாகத்தான் இருக்கிறது. இன்று மண்ணை இழந்து நெருப்பிலிட்ட புழு போல் இந்த இனம் தவிப்பதற்கு அப்படியானால் யார் பொறுப்பேற்பது?
கேள்வி 2:
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான். சரி! மனிதன் குரங்கின் தலைமையை ஏற்க வேண்டுமா? குரங்குதான் நமது முப்பாட்டன் என்று சொல்வது தகுமா?
விடுதலை என்ற ஒற்றைக் குறிக்கோளோடு மட்டுமே வரலாற்றை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடுங்கள். இன அழிப்பை சிங்களன் செய்தால் கொடுமை! கன்னடன் செய்தால் கொடுமை! தெலுங்கன் செய்தால் கொடுமை! அதையே நீ செய்தால் அது கொடுமை இல்லையா? தமிழ்சாதிக் குருதியை எவன் சிந்தினாலும் அவன் இந்த இனத்தின் எதிரியே. அப்படிக் குருதி சிந்த வைக்கும் சிந்தனைகளைத் தூண்டும் திரிபுகளை திணிக்கிறவர்களும் இந்த இனத்தின் எதிரியே. திராவிடம் வெளியே மட்டும் இல்லை. உனக்கு உள்ளேயே அது வேர் விட்டிருப்பதைக் கவனி. இதை வாசித்தவுடன் கோவம் வருகிறவர்களுக்கு ஓர் அன்பான குறிப்பு. உன் முப்பாட்டன் முருகனாக இருக்கலாம். ஆனால், “உன் தத்துவம் தவறென்று சொல்லவும் ஓளைவையின் தமிழுக்கு உரிமை உண்டு” என்பதையும் புரி. சுடுவதற்கும் சுட்டுவதற்கும் வேறுபாடு உண்டு என்றும் புரி. சுடுவது வீழ்த்துவதற்கு! சுட்டுவது எழுவதற்கு! அயலானை வீழ்த்து! நம்மவனை தூக்கி நிறுத்து!
- தமிழ்த்திரு.அரிமாவளவன்
தமிழர் தேசிய அரசியல் என்பது விடுதலைக்கான அரசியல்!
08-04-2016
வலம்புரியார் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க. போன நேரம். எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்! “கருணாநிதி ஒரு ஆலமரம் போல! அதன் கீழ் ஒரு புல்கூட முளைக்க முடியாது!” என்றார். ஏராளமான விழுதுகளை விட்டு விரிவடையும் ஆலமரம் தன் குடையின் கீழ் சில புற்பூண்டுகளைக்கூட வளரவிடுவதில்லை. இது செயலலிதாவிற்கும் பொருந்தும். விஜயகாந்திற்கும் பொருந்தும். வைகோ உள்ளிட்ட அனைத்துத் திராவிடங்களுக்கும் பொருந்தும். திராவிட அரசியலுக்கும் தமிழர் தேசிய அரசியலுக்கும் உள்ள முகாமையான வேறுபாடுகளுள் ஒன்று இது. தன்னைச் சுற்றி யாரும் வளர்ந்துவிடக்கூடாது. தான் மட்டும் போதும், என்று கவனமாக இருப்பது திராவிட அரசியல்.
அப்படியானால், தமிழர் தேசிய அரசியலின் தலைமை எப்படி இருக்க வேண்டும்? என்று கேட்கிறீர்களா?
கீழே இருக்கிற படம் யாருடையது என்று தெரிகிறதா? எனது மிகுந்த மதிப்பிற்குரிய மாவீரன் பால்ராஜ் அவர்களது. தலைவர் பிராபகரனின் அறையை அலங்கரித்த படங்களுள் ஒன்று இது.

இத்தாவிலில் 1500 புலி வீரர்களை வைத்துக் கொண்டு 40,000 சிங்களப் படைகளை 34 நாடகள் அலைக்கழித்து வெற்றி கொண்டவன் மாவீரன் பால்ராஜ். சர்க்கரை நோயால் துவண்டவன் மாவீரன் பால்ராஜ். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் களம் கண்டவர் அவர். போரில் வென்று தலைவனிடம் திரும்பியபோது எதிரிகளின் உரையாடலை ஒலிப்பதிவு செய்து வைத்திருந்த தலைவர் அதை அவருக்குப் போட்டுக் காட்டினார். பாராட்டிச் சிரித்து மகிழ்ந்தார். தளபதி காமினி கெட்டியாராட்சியைத் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் '40.000 பேரைக் கொண்ட படையைக் கொண்டு, சப்ளை இல்லாமல் சண்டையிடும் 1500 போரை சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு இராணுவமா? என்று கடுமையாக பேச அதற்கு பதிலளிதத கெட்டியாராச்சி 'பிரபாகரன் நேரா வந்து சண்டையிட்டாக்கூட சமாளிச்சிடுவன். வந்திருப்பது பால்ராஜ். நிலைகொண்டு விட்டால் அவரை அப்புறப்படுத்துவது கடினம்' அத்துடன் 'நீங்கள் பலாலியில இருந்து கேள்வி கேட்கிறதை விட்டிட்டு, இந்த இடத்திற்கு வந்து பார்த்தால்தான் நிலவரம் புரியும்' என்றார்.
உன்னைவிட ஒரு துறையில் ஒருவன் திறமையானவனாக இருந்தால் அவனைத் தட்டிக் கொடு!
அதுதான் தமிழர் தேசிய அரசியல்.
தமிழர் தேசிய அரசியல் என்பது விடுதலைக்கான அரசியல்! எனவே அது மக்கள் மையப்படும்!
திராவிட அரசியல் என்பது ஆதிக்கத்தைத் தக்க வைக்க நடக்கும் பச்சையான தன்னல அரசியல்!
ஏன் இதை இப்போது எழுதுகிறேன் என்று சிந்திக்கத் தொடங்குவோர் கொடுத்து வைத்தவர்கள்தான்!
- தமிழ்த்திரு.அரிமாவளவன்